செவ்வாய், 16 அக்டோபர், 2012

கௌதம புத்தர்

கௌதம புத்தர் மாபெரும் விஷயங்களைச் சொல்லும் விதம் மிகவும் எளிமையாகவும் அறிவுபூர்வமாகவும் இருக்கும். ஒரு சமயம் சீடர்களிடம் உரையாற்ற வரும் போது கையில் ஒரு துணியுடன் வந்தார். அவர்கள் முன் பேச அமர்ந்தவர் பேச்சைத் துவங்காமல் கையில் கொண்டு வந்திருந்த அந்த்த் துணியில் முடிச்சுகளைப் போட ஆரம்பித்தார். மற்ற சீடர்கள் அவர் பேசக் காத்திருக்கையில் சாரிபுத்தன் என்கிற சீடன் மட்டும் அவர் செய்கையும் அவர் உரையின் ஒரு அங்கமே என்பதை உணர்ந்திருந்தான். அவன் உன்னிப்பாக அவர் செயலைக் கவனித்துக் கொண்டிருந்தான்.

விதவிதமாக சில முடிச்சுகளைப் போட்டு விட்டு தலை நிமிர்ந்த புத்தர் கேட்டார். “இந்த முடிச்சுகளை விரைவில் அவிழ்க்க என்ன செய்ய வேண்டும்?”

மற்றவர்கள் யோசித்துக் கொண்டிருக்க உடனடியாக சாரிபுத்தன் சொன்னான். “குருவே! முடிச்சுகள் எப்படி போடப்பட்டுள்ளன என்பதை அறியாத வரை அவற்றை விரைவில் அவிழ்க்க வழியில்லை. முடிச்சு போடப்பட்ட முறையை அறிந்திருந்தால் மட்டுமே அதை விரைவில் அவிழ்க்க முடியும்” .

புத்தர் சொன்னார். “சரியாகச் சொன்னாய் சாரிபுத்தா. நினைவோடு போடப்படும் முடிச்சுகளை அவிழ்ப்பது எளிது. நினைவின்றி போடும் முடிச்சுகள் சிக்கலானவை. அவை சில சமயங்களில் அவிழ்க்க முடியாமலும் போகலாம். நம் வாழ்க்கையிலும் அப்படித்தான். விழிப்புணர்வு இல்லாமல் நம் வாழ்வில் ஏற்படுத்திக் கொள்ளும் சிக்கல்களில் இருந்து தான் மீள வழி தெரியாமல் திண்டாடுகிறோம்”

துணியில் போட்ட முடிச்சுகள் போட்ட விதத்திலேயே பிரிக்க சுலபமானவை. கவனத்துடன் போட்டிருந்தால் பொறுமையுடன் பிரிக்கலாம். இல்லாவிட்டால் பிரிக்க நாம் செய்யும் உத்திகளும் கூடுதல் முடிச்சுகளாகி விடும். கடைசியில் துணியையே கிழிக்காமல் முடிச்சுகளை அவிழ்க்க முடியாமல் போகும் நிலை கூட ஏற்படலாம்.

வாழ்க்கையிலும் அப்படித்தான். என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம், எப்படி செய்கிறோம் என்கிற விழிப்புணர்வோடு செய்தால் தவறுகள் அதிகம் நிகழ வாய்ப்பே இல்லை. அப்படித் தவறுகள் நிகழ்ந்தாலும் அவற்றில் பெரும்பாலானவை விரைவிலேயே சரிப்படுத்திக் கொள்ள முடிபவையாகவே இருக்கும். 

ஆனால் விழிப்புணர்வில்லாமால் நம் வாழ்வில் செய்து கொள்ளும் சிக்கல்கள் ஆபத்தானவை. அந்தந்த நேர உந்துதல்களில் நாமாகவே ஏற்படுத்திக் கொள்பவை. உணர்ச்சிகளின் பிரவாகத்தில் தன்னிலை இழந்து என்ன செய்கிறோம் என்ற பிரக்ஞையே இல்லாமல் செய்து கொள்பவை. இந்த சிக்கல்களில் இருந்து மீள செய்யும் முயற்சிகள் பல சமயங்களில் சிக்கல்களை அதிகப்படுத்தி மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி விடும். பல சமயங்களில் பெரிய சேதாரத்தை ஏற்படுத்தாமல் சிக்கல்களில் இருந்து விடுபட முடியாது.

துணியின் முடிச்சுகள் அவிழ்க்க முடிந்த பின் துணி பழைய நிலைமைக்கே வரலாம். வாழ்க்கையின் சிக்கல்கள் அப்படி அல்ல. பல சமயங்களில் சிக்கல்கள் தீரும் போது வாழ்க்கை முன்பு போல திரும்பி மாற வாய்ப்பு இல்லை. எல்லாமே தலைகீழாக மாறிப் போகும் அபாயம் கூட உண்டு. மேலும் சிக்கல்கள் அனைத்தும் நாமே தான் செய்து கொள்ள வேண்டும் என்பதில்லை. பெரும்பாலான சிக்கல்களில் நம் பங்கு கண்டிப்பாக ஓரளவாவது இருக்கக் கூடும் என்றாலும், சில சமயங்களில் மற்றவர்களாலும் சிக்கல்கள் நம் வாழ்க்கையில் ஏற்பட்டு விடலாம்.

நம் செயல்களால் ஆனாலும் சரி, மற்றவர்கள் செயல்களால் ஆனாலும் சரி, விழிப்புணர்வோடு வாழ்க்கையை நடத்துபவன் வரும் சிக்கல்களை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு கொள்ள முடியும். அதனால் கவனமாகவும், வேகமாகவும், ஆரம்ப நிலையிலேயே, அவ்வப்போதே அவற்றைத் தவிர்க்கவோ, சரி செய்து கொள்ளவோ முடியும். விழிப்புணர்வு இல்லாத போதோ அவை பூதாகரமாகும் வரை கவனிக்கப்படுவதில்லை. பின் அதன் விளைவுகளில் சிக்கித் திண்டாட வேண்டி வரும். சில சிக்கல்கள் தீர்க்க முடியாமல் போகலாம், தீர்க்க முடிந்தாலும் மீதமுள்ள வாழ்க்கை வாழ்க்கை நாம் ரசிக்க முடியாததாக மாறியும் போகலாம்.

எனவே விழிப்புணர்வோடு இருங்கள். என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள். என்ன நடக்கிறது என்பதிலும் கவனமாக இருங்கள். கண்டிப்பாக நீங்கள் 90 சதவீத சிக்கல்களை விழுப்புணர்வோடு இருப்பதால் மட்டும் தவிர்த்து விட முடியும்.

சனி, 13 அக்டோபர், 2012

ஆயக்கலைகள் அறுபத்துநான்கிற்கும் ஆதாரமாகத் திகழ்பவலே



ஆயக்கலைகள் அறுபத்துநான்கிற்கும் ஆதாரமாகத் திகழ்பவள் கலைமகள் சரஸ்வதி . எல்லாக்கலைகளுக்கும் இருப்பிடம் என நாம் கூறினாலும் , கண்ணுக்கு பளிச்சென்று தெரிவது வீணை தான்.

கலைமகள் சரஸ்வதியின் வீணை கலைகளின் குறியீடாக இருக்கிறது . சரஸ்வதி தேவி வீணையை எப்போதும் சரஸ்வதி தேவி இசைத்தபடியிருப்பது உலகில் கலைகள் தினமும் வளர்ந்து கொண்டிருக்கிறது என்கிற உண்மையை நமக்கு
தெரிவிப்பதாக உள்ளது.

வீணையின் தந்திகள் மிகவும் இழுத்து கட்டபட்டிருந்தால் அவை அறுந்துவிடும். அறுந்துவிடும் என்று தொய்வாக கட்டினால் நல்ல இசை வெளிப்படாது. எனவே எது சரியான நிலையோ அந்த நிலையில் நரம்புகள் கட்டபட்டிருந்தால் மட்டுமே சுருதி_சுத்தமாக வீணையில்நாதம்வெளிப்படும்.

நம் உடலும் வீணை போலத்தான். அதில் ஐம்புலன்கள் மனம், போன்ற அகக் கருவிகள் எல்லாம் தந்திகலே . அந்த அகக் கருவிகலாகிய தந்திகள் சரியானநிலையில் கட்டபட்டிருக்க வேண்டும். அப்போதுதான் ஞானம் என்னும் இனிமையான ஸ்வரம் வெளிப்படும்.

இந்த சரஸ்வதி பூஜை நன்னாளில் "இவ் உலக வாழ்வு பொய்யானது, இறைவனின் நிழலே என்றும் அடைக்கலம்தரும்' என்னும் உயர்ந்த மேலான ஞானத்தைப்பெற நம்மைத் தகுதிப்படுத்தி கொள்வோம். சரஸ்வதி 108 போற்றி
சரஸ்வதி பூஜை நல் வாழ்த்துக்கள்
Tags; சரஸ்வதி பூஜை , சரஸ்வதிபூஜை, கலைமகள் சரஸ்வதி, ஆயகலைகள் அறுபத்து நான்கு

சரஸ்வதி 108 போற்றி


ஓம் அறிவுருவே_போற்றி
ஓம் அறியாமை தீர்ப்பாய் போற்றி
ஓம் அன்பின் வடிவே _போற்றி
ஓம் அநுபூதி அருள்வாய் போற்றி
ஓம் அறிவுக்கடலே _போற்றி
ஓம் அளத்தற்கு அரியவளே போற்றி
ஓம் அன்ன வாகினியே _போற்றி
ஓம் அகில லோக குருவே _போற்றி
ஓம் அருளின் பிறப்பிடமே போற்றி

ஓம் ஆசான் ஆனவளே போற்றி
ஓம் ஆனந்த வடிவே போற்றி
ஓம் ஆதாரசக்தியே போற்றி
ஓம் இன்னருள் சுரப்பாய் போற்றி
ஓம் இகபர சுகம் தருவாய்_போற்றி
ஓம் ஈர நெஞ்சம் கொண்டாய் போற்றி
ஓம் ஈடேறச் செய்பவளே போற்றி
ஓம் உண்மைப் பொருளே போற்றி
ஓம் உள்ளத்து உறைபவளே போற்றி
ஓம் ஊமையை பேசவைத்தாய்_போற்றி
ஓம் எண்ணம் நிறைவேற்றுவாய் போற்றி
ஓம் ஏடு கையில் ஏந்தியவளே போற்றி
ஓம் ஓங்கார வடிவினளே_போற்றி
ஓம் கலைக் களஞ்சியமே போற்றி
ஓம் கற்போர்க்கு இனியவளே போற்றி
ஓம் கலைஞானச் செல்வியே_போற்றி
ஓம் கரை சேர்க்கும் கண்ணே போற்றி
ஓம் கலைவாணித் தெய்வமே போற்றி
ஓம் காட்சிக்கு இனியவளே போற்றி
ஓம் காயத்ரியாய் அருள்பவளே போற்றி
ஓம் குருவாக உபதேசிப்பவளே போற்றி
ஓம் குறை தீர்த்தருள்வாய் போற்றி
ஓம் குணக் குன்றானவளே போற்றி
ஓம் குற்றம் பொறுப்பவளே போற்றி
ஓம் சந்தேகம் போக்குவாய் போற்றி
ஓம் சச்சிதானந்தப் பொருளே போற்றி
ஓம் சாந்த சொரூபினியே போற்றி
ஓம் சான்றோர் நெஞ்சினளே போற்றி
ஓம் சாரதாம்பிகையே போற்றி
ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி
ஓம் சித்தியளிப்பவளே போற்றி
ஓம் சுருதிக்கு ஆதாரமே போற்றி
ஓம் சுத்தஞான வடிவே போற்றி
ஓம் ஞானக்கடலானாய் போற்றி
ஓம் ஞானம் தந்தருள்வாய் போற்றி
ஓம் ஞானப்பூங்கோதையே போற்றி
ஓம் ஞானேஸ்வரியே போற்றி
ஓம் ஞானத்தின் வரம்பே போற்றி
ஓம் ஞான ஆசிரியையே போற்றி
ஓம் ஞானத்தின் காவலே போற்றி
ஓம் தவத்தில் ஆழ்ந்தவளே போற்றி
ஓம் தகைமை தருபவளே போற்றி
ஓம் தஞ்சம் அளிப்பவளே போற்றி
ஓம் தாயான தயாபரியே போற்றி
ஓம் தண்ணருள் தருவாய் போற்றி
ஓம் துதித்தவர்க்கு துணையேபோற்றி
ஓம் நவமி தேவதையே போற்றி
ஓம் நவராத்திரி நாயகியே போற்றி
ஓம் நன்னெறி தருபவளே போற்றி
ஓம் நலம் அளிப்பவளே போற்றி
ஓம் நாவிற்கு அரசியே_போற்றி
ஓம் நல்லவர்களின் மனமே போற்றி
ஓம் நா நயம் அருள்வாய்_போற்றி
ஓம் நான்மறை நாயகியே போற்றி_
ஓம் நாவில் உறைபவளே போற்றி
ஓம் நாதத்தின் தலைவியே_போற்றி
ஓம் நாத வெள்ளமானாய் போற்றி
ஓம் நித்திய ஒளிவடிவே_போற்றி
ஓம் நிமலையாய் நின்றவளே போற்றி
ஓம் நித்தம் வளர்பவளே போற்றி
ஓம் நிறைவு அளிப்பவளே போற்றி
ஓம் நுட்பம் கொண்டவளே_ போற்றி
ஓம் பண்ணின் இசையே போற்றி
ஓம் பாட்டின் ஆதாரமே போற்றி
ஓம் பாவலர் நாடும் பண்பே போற்றி
ஓம் பிரணவ சொரூபமே போற்றி
ஓம் பிரம்மனின் நாயகியே போற்றி
ஓம் பிரம்ம ஞான வடிவே போற்றி
ஓம் பிறவிப்பிணி அறுப்பாய் போற்றி
ஓம் பூரண வடிவானவளே போற்றி
ஓம் புவனத்தைக் காப்பவளே போற்றி
ஓம் புத்தகத்தில்_உறைபவளே போற்றி
ஓம் மனம்வாக்கு கடந்தவளே போற்றி
ஓம் மங்கல வடிவானவளே போற்றி
ஓம் மந்திரப் பொருளானவளே போற்றி
ஓம் மாயையை அழிப்பவளே போற்றி
ஓம் முனிவர் நெஞ்சமர்ந்தாய் போற்றி
ஓம் முற்றறிந்த அறிவே போற்றி
ஓம் முக்காலம் உணர்ந்தவளே போற்றி
ஓம் மூலமந்திர வடிவினளே போற்றி
ஓம் மூல நாளில் வந்தவளே போற்றி
ஓம் முக்தி அளிப்பவளே போற்றி
ஓம் மேதையாக்குபவளே போற்றி
ஓம் மேன்மை தருபவளே போற்றி
ஓம் யாகத்தின் பலனே போற்றி
ஓம் யோகத்தின் பயனே போற்றி
ஓம் வழித்துணை வருவாய் போற்றி
ஓம் வரம் அருள்பவளே போற்றி
ஓம் வாணி சரஸ்வதியே போற்றி
ஓம் வாக்கின் நாயகியே போற்றி
ஓம் வித்தக வடிவினளே போற்றி
ஓம் வித்யா லட்சுமியே போற்றி
ஓம் வெண்கலை பூண்டவளே போற்றி
ஓம் வெள்ளை மனத்தாளே போற்றி
ஓம் வெண்தாமரையினாளே போற்றி
ஓம் வீணை ஏந்தியவளே போற்றி
ஓம் வீட்டின்பம் தருவாய் போற்றி
ஓம் வேதத்தின் உட்பொருளே போற்றி
ஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி

அன்ன தானம் (மகேஸ்வர தானம்)

 அன்ன தானம் (மகேஸ்வர  தானம்)
முன்னொரு காலத்தில் ஸ்வேது என்ற மன்னன் காசியை ஆண்டு வந்தான்அவன் காசியில் இருந்த ஒரு மன்னனின் பரம்பரையில் வந்தவன். அவனுடைய சகோதரரான சுதேவா என்பவர் பற்றிய செய்தி மகாபாரத அனுசாசன பர்வ காண்டத்தில் உள்ளது. ஸ்வேது நல்ல பண்புகளைக் கொண்டவர். தான தர்மங்களை நிறைய செய்தவர். யார் வந்து நின்றாலும் அவர்களுக்கு ஏதேனும்
கொடுத்து அனுப்புவார். ஆடை, அணிகலன்கள், பொருட்கள் என எதைக் கேட்டாலும் அவற்றை தருவார்.

அவர் கர்ணனை மிஞ்சியவர் தானத்தில். ஆனால் என்ன காரணத்தினாலோ அவர் தனது ராஜ்ய காலத்தில் அன்ன தானம் செய்யவே இல்லை. ஒருமுறை பசியோடு வந்தவர்களுக்கு கை நிறைய பொற் காசுகளைக் கொடுத்து அனுப்பினார். இன்னொரு முறை பசியோடு வந்தவர்களுக்கு ஆடைகள், ஆபரணங்களை தந்து அனுப்பினார். இப்படியாக பசி என்று வந்தாலும் சரி, உதவி என்று வந்தாலும் சரி ஆடை, அணிகலன்கள், பொருட்கள் என பலவற்றையும் கொடுத்தாலும், வந்தவர்களுக்கு ஒரு கை அன்னமிட்டு அனுப்பியது இல்லை. அவருடைய மனதில் இருந்த எண்ணம் என்ன என்றால், பசி என்று வந்தால் அவர்களுக்கு உணவைக் கொடுத்து விட்டால் அதோடு அவர்கள் பசி அந்த நேரத்தில் மட்டுமே அடங்கும். அதன் பின் அவர்கள் சென்று விடுவார்கள். அடுத்த நாள் மீண்டும் வேறு எங்கும் சென்று பிச்சை எடுப்பார்கள். ஆகவே பொருளாகக் கொடுத்தால் அதை விற்று சில நாட்களுக்கேனும் உணவு உண்ண வழி செய்து கொள்வார்கள் என்றே எண்ணினார். ஆனால் அவருக்குப் புரியவில்லை, பசி வேலையில் சோறு கிடைக்காவிடில் பொருளையா சாப்பிட முடியும்? அமைச்சர்கள் எத்தனையோ கூறியும் மன்னன் தன்னுடைய அந்த குணத்தை மாற்றிக் கொள்ளவே இல்லை.

காலபோக்கில் மன்னன் மரணம் அடைந்தான். அவன் செய்திருந்த தானங்களினால் சொர்க்க லோகத்துக்கு சென்றவன் பசியால் துடித்தான். அங்கு அவன் ஆத்மாவிற்கு உண்ண உணவு கிடைக்கவில்லை. பசியால் துடித்த ஆத்மா பிரும்மாவிடம் சென்று தான் வாழ்நாளில் செய்த தான தருமங்களைக் கூறி சொர்கலோகத்தில் உள்ள தனது நிலையைக் கூறி நியாயம் கேட்டது. பிரும்மா கூறினார் 'ஸ்வேது, நீ நிறைய தான தர்மங்களை செய்துள்ளாய். ஆனால் இந்த உலகிலேயே பெரும் தானமான அன்னதானத்தை நீ செய்யவில்லை. அதனால்தான் உனக்கு இந்த கதி வந்துள்ளது. நீ பூஉலகில் என்ன பொருட்களை தானம் செய்தாயோ, அந்தப் பொருட்கள்தான் உனக்கு இங்கும் கிடைக்கும். ஆகவே நீ செய்துள்ள புண்ணியத்தினால் உன் உடல் இன்னமும் கங்கை நதியில் மிதந்து கொண்டு இருக்கின்றது. அங்கு போய் உன் உடலை நீயே அறுத்து உண்ண வேண்டியதுதான். வேறு வழி இல்லை ' என்றார்.

தேவ ச்தூலத்தில், அதாவது உடலே இல்லாத ஒரு ஆத்மா பூமிக்குச் சென்று அங்குள்ள உடலை எப்படி உண்ண முடியும். பசி தாங்க முடியாமல் அவனை வருத்தியது. ஆகவே வேறு வழி இன்றி பூமிக்கு சென்றான். கங்கையும் பிரயாகையும் சேரும் இடத்தில் சென்று நதியில் மூழ்கி எழுந்தது. ஆனாலும் பசியும் அடங்கவில்லை, பசியைப் போக்கிக் கொள்ளும் வழி தெரியவில்லை. அந்த நதியில் குளித்தால் அனைத்து பாவங்களும் போகும் என்பதை அறிந்திருந்த ஆத்மா அதை செய்தும் பசி போகவில்லையே என வருத்தமுற்று, நதிக் கரையில் அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருக்கையில், நதிக் கரையில் சென்று கொண்டு இருந்த அகஸ்திய முனிவரைக் கண்டது. அகஸ்திய முனிவரிடம் ஓடோடிச் சென்ற ஆத்மா தனது நிலையைக் கூறி தனது பசியைத் தீர்த்துக் கொள்ள வழி கூறி உதவுமாறு அவரை வேண்டியது. அவரும் 'நீ பிரயாக நதிக்கரையில் அன்னதானம் செய்தால் உன் பசி அடங்கும்' என்றார். மரணம் அடைந்து தேவ சரீரத்தில் உள்ள தான் எப்படி அன்ன தானம் செய்வது என்ற கேள்வியை அது அகஸ்தியரிடம் எழுப்ப அவர் கூறினார், 'உன்னிடம் ஏதாவது பொருள் இருந்தால் அதை யாருக்காவது கொடுத்து அன்ன தானத்தை செய்யச் சொல்லி பசியைப் போக்கிக் கொள்' என்று மீண்டும் அறிவுறுத்தினார்.

மீண்டும் அதே பிரச்சனை, தேவ சரீரத்தில் உள்ளவனிடம் என்ன பொருள் இருக்க முடியும்? ஸ்தூல சரீரத்தில் இருந்தால் தன்னிடம் உள்ள பொருளைக் கயற்றிக் கொடுக்க முடியும். இப்போது எப்படி அதை செய்ய முடியும். உடலே இல்லாதவன் என்ன பொருளை வைத்திருக்க முடியும்? ஆனாலும் அவன் நம்பிக்கையை இழக்க விரும்பாமல் அகஸ்தியரிடம் தன்னுடையப் பசியைப் போக்கிக் கொள்ள தனக்கு எந்த விதத்திலாவது உதவுமாறு கேட்டு கதறினான்.

அகஸ்தியர் மனம் நெகிழ்ந்தது. ஒருகணம் யோசித்தார். அந்த மன்னன் வாழ்நாளில் பல தர்ம காரியங்களை செய்துள்ளான். யாரையும் துன்புறுத்தவில்லை. கொடுமைப் படுத்தவில்லை. அவன் செய்த ஒரே தவறு அன்ன தானம் செய்யவில்லையே தவிர அவன் செய்யாத தானமே இல்லை என்ற அளவிற்கு தானம் செய்துள்ளான். ஆகவே அவனுக்கு உதவுவது தன கடமை என்பதை உணர்ந்தார்.
'சரி அப்படி என்றால் உன் புண்ணியத்தில் ஒரு பகுதியைக் கொடு. நான் உனக்கு உதவுகிறேன்' என்றார். ஸ்வேதுவின் ஆத்மாவும் சற்றும் தயங்காமல் தனது புண்ணியத்தில் பாதியை அவரிடம் அங்கேயே கொடுப்பதாக சத்தியம் செய்து கொடுக்க, அகஸ்திய முனிவர் அந்த புண்ணியத்தை பெற்றுக் கொண்டு, தனது சக்தியினால் அதற்கு ஒரு உருவகம் கொடுத்தார். அதை ஒரு தங்க நகையாக்கி தன்னுடைய சீடரிடம் தந்தார்.

உடனே கடைவீதிக்குச் சென்று அதை விற்று, உணவுப் பொருட்களை வாங்கி வருமாறு கூறினார். அந்த சிஷ்யரும் தாமதிக்காமல் அந்த நகையை எடுத்துச் சென்று கடை வீதியில் விற்று விட்டு, அதற்க்கான பணத்தில் அரிசி, தானியங்கள், பருப்புக்களை வாங்கி உணவு தயாரித்துக் கொண்டு வந்து அகஸ்திய முனிவரிடம் கொடுக்க அவரும் அதை கங்கைக் கரையில் இருந்த அனைவருக்கும் அன்ன தானம் செய்யுமாறு கூறினார். அந்த அன்னதானத்தை செய்தவுடன் ஸ்வேதுவின் பசி உடனே ஒரு மின்னலைப் போல அகன்றது. அகஸ்திய முனிவருக்கு ஸ்வேதுவின் ஆத்மா நன்றி கூறி விட்டு, மீண்டும் மேலுலகம் சென்றுவிட்டது. அதன் பின் ஸ்வேதுவின் ஆத்மா பசி என்ற கொடுமையை அனுபவிக்கவே இல்லை.

நீதி: நம் வாழ்நாளில் நம்மால் முடிந்த அளவு மற்ற தானங்களுடன் அன்னதானமும் செய்ய வேண்டும். தானங்களின் மூலம் நமக்குக் கிடைக்கும் புண்ணியங்கள் நம்மை எந்த உலகிலும் நம்மைக் காத்து வரும். நாம் இறந்தப் பின் பொருளும், பொன்னும் நம்முடன் மேலுலகத்துக்கு வருவதில்லை. தானங்கள் பெற்றுத் தரும் புண்ணியங்களே நம்முடன் வருகின்றன. தானங்கள் பல வகை உண்டு. பொதுவாக அனைத்தையும் விட மேலான தானமான வஸ்த்ர தானத்தை மஹா தானம் என்பார்கள். ஆனால் தானங்களிலேயே சிறந்த தானம் வஸ்த்ர தானத்தை விட மேலான அன்ன தானமே. அன்ன தானத்தை மஹா தானம் என்றல்ல, மகேஸ்வர (சிவபெருமான்) என்பார்கள். அதாவது மஹேசனான சிவபெருமானின் சாட்சியாக செய்யும் தானம் என்பார்கள். ஆகவே அது பெற்றுத் தரும் புண்ணியத்திற்கு அளவே இல்லை.

விநாயகப் பெருமானுக்கு மூஞ்சுரு வாகனமான கதை



 விநாயகப் பெருமானுக்கு மூஞ்சுரு வாகனமான கதை 'வி' என்றால் 'இதற்குமேல் எதுவும் இல்லை' என்பது பொருள். 'நாயகர்' என்றால் 'தலைவர்' என பொருள். அப்படி எனில் , விநாயகருக்கு மேலான சிறந்த கடவுள் யாரும் இல்லை_என்பதே 'விநாயகர்' என்பதன் முழுபொருள்!

இப்படிப்பட்ட விநாயகர், மூஞ்சுருவை வாகனமாக கொண்டிருக்க காரணம், அவர் நிகழ்த்திய ஒரு திருவிளையாடல் தான்!

என்ன திருவிளையாடல் அது?

அவன் பெயர் கிரவுஞ்சன். கந்தர்வர்களின் மன்னன். விநாயகரின் தீவிர பக்தன். ஒருநாள், இமயமலைச்சாரல் வழியாக ஆகாய மார்க்கத்தில் சென்று கொண்டிருந்தான் கிரவுஞ்சன்.

திடீரென்று பூமியில் ஓரிடத்தில் ஏதோ ஒன்று அவனது கண்களை வசீகரிக்க... அப்படியே நின்றான். அங்கே ஆழமாக நோக்கினான். 'ஆஹா... என்னவொரு அழகு!' என்று தன்னை அறியாமலேயே புகழ்ந்தான்.

அவன் புகழ்ந்தது ஒரு ரிஷிபத்தினியை..! அவள் பெயர் மனோரமை. சவுபரி என்ற முனிவரின் மனைவி. மிகவும் பேரழகி! முனிவருக்கேற்ற பத்தினியாக, தெய்வ பக்தி நிறைந்தவளாக, எளிமை யான வாழ்க்கை வாழ்ந்து வந்தாள் அவள்.

தனது குடிலில் அமர்ந்து, பூக்களை மாலையாகத் தொடுத்துக் கொண்டிருந்தபோதுதான், கிரவுஞ்சனின் பார்வையில் சிக்கினாள் அவள். அவளது அழகில் மயங்கிய கிரவுஞ்சன், அவளது குடிலுக்கு வந்தான். அவனைப் பார்த்த மாத்திரத்தில் சட்டென்று எழுந்துவிட்டாள் மனோரமை. வருவது யார் என்பது தெரியாததால், அவன் மீது குழப்பமான பார்வையை வீசினாள். ஆனால் அவனோ, அவளது அழகை ரசித்தபடியே நெருங்கினான்.

ரிஷி பத்தினிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. 'தாங்கள் யார்? என் கணவர் இப்போது இங்கே இல்லை. தங்களுக்கு என்ன வேண்டும்? இங்கே யாரைப் பார்க்க வந்தீர்கள்?' என்று கேட்டாள் மனோரமை.

ஆனால், அவள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்வதற்கு பதிலாக, வேகமாக நெருங்கி அவளது கையைப் பற்றினான் கிரவுஞ்சன். இதைச் சிறிதும் எதிர்பார்க்காத மனோரமை அவன் பிடியில் இருந்து விடுபடத் திமிறினாள். 'உதவி... உதவி...' என்று கத்தினாள்.

குடிலை நெருங்கிக் கொண்டிருந்த சவுபரி முனிவர், தனது மனைவியின் அலறல் கேட்டு, அங்கே வேகமாக ஓடி வந்தார்.

தனது மனைவியை ஒரு கந்தர்வன் கவர முயன்று கொண்டிருப் பதைக் கண்ட அவர், கோபத்தில் பொங்கியெழுந்தார்.

'அடே கந்தர்வா...' என்ற அவரது கொந்தளிப்பான குரல் கேட்டுத் திடுக்கிட்டுப் போனான் கிரவுஞ்சன். அப்போதுதான் அவனுக்குத் தான் செய்த தவறு உறைத்தது. மனோரமையைத் தனது பிடியில் இருந்து விட்டுவிட்டு முனிவர் பக்கம் திரும்பினான்.

கண்கள் கோபத்தில் சிவக்க, அவனுக்குச் சாபமிட்டார் முனிவர். 'உத்தமமான என் தர்ம பத்தினியின் கையைப் பிடித்து இழுத்து, அவளை அடைய முயன்ற உன்னை மன்னிக்கவே முடியாது. இப்போதே நீ, மண்ணைத் தோண்டி வளையில் ஒளியும் மூஞ்சுருவாக மாறக் கடவாய்!' என்று சபித்தார்.

அதிர்ச்சியுற்றான் கிரவுஞ்சன். செய்த தவற்றுக்காக மன்னிப்பு வேண்டினான்: 'மோகம் என் கண்களை மறைத்து, அறிவை மழுங்கச் செய்துவிட்டது. என்னை மன்னித்து, எனக்கு சாப விமோசனம் அருளுங்கள்' என்று வேண்டியவாறு, முனிவரின் கால்களில் விழுந்து கதறினான்.

'தவறு செய்தவன் தண்டனையை அனுபவித்துதான் ஆக வேண்டும். ஆனாலும், உன் மேல் எனக்கு இரக்கம் சுரக்கிறது. முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான் உன்னைக் காப்பாற்றுவார்!' என்றார் சவுபரி முனிவர்.

அக்கணமே, ராட்சச மூஞ்சுருவாக மாறிய கிரவுஞ்சன், காட்டுக்குள் ஓடி மறைந்தான்.

நாட்கள் வேகமாக நகர்ந்தன.

அதே பகுதியில், புத்திர பாக்கியம் வேண்டித் தவம் இருந்த ஒரு மகா ராணிக்கு மகனாக அவதரித்தார் விநாயகர். ஒருநாள், பெருத்த அட்டகாசத்தில் ஈடுபட்ட அந்தக் கிரவுஞ்ச மூஞ்சுரு மீது தனது பாசக்கயிற்றை வீசினார். அதில் சிக்கிக்கொண்ட மூஞ்சுருவால் தப்பிக்க முடியவில்லை. அப்போதுதான் அதற்கு, தன் மீது பாசக்கயிற்றை வீசியது விநாயகரே என்பது புரிந்தது. தனது செயலுக்காக அவரிடம் மன்னிப்பு கேட்டது.

கருணையே வடிவான விநாயகர் கிரவுஞ்ச மூஞ்சுருவை மன்னித்தார். பிறகு, அதைத் தனது வாகனமாக ஏற்று அருள்புரிந்தார்.

விநாயகப் பெருமானுக்கு மூஞ்சுரு வாகனமான கதை இதுதான்!

புதன், 3 அக்டோபர், 2012

கூடன்குளத்தில் மட்டும் ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம், அமர்க்களம் ?


அமெரிக்காவில் 65 அணுமின் நிலையங்கள் உள்ளன. இவற்றுககாக 104 வர்த்தக அனுமதிகள் அளிக்கபபட்டிருக்கின்றன. அங்கு, அணு மின் நிலையங்களுக்கு 10கிலோ மீட்டரைவிட அருகில் வசித்துவருகிற மக்களின் எண்ணிக்கை 30 லட்சம்.

சரி, அமெரிக்கானாலே நம்நாட்டவருக்கு ஒரு அலர்ஜி: அதனால் அந்நாட்டுக்கணக்கை விடுவோம். உலகிலேயே அதிகளவில் அணு மின் உற்பத்தியை பயன் படுத்துகிற நாடு பிரான்ஸ்: அந் நாட்டின் மின்சாரத்தேவையில் 77% அணு மின் நிலையங்கள் தான் பூர்த்திசெய்கின்றன. பெல்ஜியத்தில் 54% அணு மின் உற்பத்தி. ஸ்வீடனில் 40%: சுவிட்சர்லாந்தில் 41 %. இவையெல்லாம் சுற்றுச் சூழல் முதற் கொண்டு, மனித உரிமைவரை பல அடிப்படை விஷயங்களில் மிகஅக்கறை செலுத்துகிற நாடுகள். தென்கொரியாவில் 34 சதவிகிதம் அணு மின் உற்பத்தி. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

சரி, இவையெல்லாமே மேற்கத்திய நாடுகள்: அதனால் நல்லஎண்ணம் கொண்ட நாடுகள் அல்ல என்றே வைத்துக்கொண்டு, நம்நாட்டின் மீது மிகவும் நல்லெண்ணம்கொண்ட சீனாவை பார்ப்போம். அங்கே 40 அணு மின் நிலையங்களுக்குத் திட்டமிடப்பட்டுள்ளன.

இந்தியாவில் தற்போது 19 அணு மின் உயர்ப்பத்தி நிலையங்கள் இருக்கின்றன . ராஜஸ்தானில் ஆறு , மகாராஷ்ட்ராவில் நான்கு , குஜராத்தில் இரண்டு , கர்நாடகத்தில் மூன்று , தமிழ் நாட்டில் கல்பாக்கம் இரண்டு , உத்திரப் பிரதேசம் இரண்டு .

இதுதவிர, இந்தியாவில் தற்போது கர்நாடகாவில் 1, ராஜஸ்தானில் 2, குஜராத்தில் 2, மகாராஷ்ட்ரத்தில் 4 நிறுவப் பட இருக்கின்றன. இவற்றுடன் கூடன் குளமும் ஒன்று.

உண்மை நிலை இப்படி இருக்க, கூடன் குளத்தில் மட்டும் இவ்வளவு ஆர்ப்பாட்டங்கள் , அமர்க்களம் ஏன்? கல்பாக்கம் அணு மின் நிலையம் கிட்டத்தட்ட 30 வருடங்களாக இயங்கி வருகிறதே? அதனால் மானோ, மீனோ, மனிதனோ பாதிக்கப்பட வில்லையே! பலலட்சம் மக்களைக்கொண்ட சென்னைக்கு அருகில் கல்பாக்கம் உள்ளதால் , சென்னைக்கு என்னகேடு வந்தது? கல்பாக்கத்திலேயே பலர் வசிக்கிறார்களே! குழந்தைகள்கூட அங்கேயே இருந்து பள்ளிக்கு செல்கின்றனவே?

அங்கு உருவகத ஆபத்து, கூடங்குளத்தில் மட்டும் ஏற்ப்பட்டுவிடுமா? இதுவரை கண்டுபிடிக்கப் பட்டுள்ள மிகதிறமையான பாதுகாப்பு ஏற்பாடுகள், கூடங்குளத்தில் செய்யப்பட்டிருககின்றன என விஞ்ஞானிகள் தெரிவித்தார்களே?

இப்படி யெல்லாம் இருக்க, அங்கே ஆர்ப் பாட்டம் நடக்கிறது எனில் – அதற்கு எதோஒரு கேட்டநோக்கம் கொண்ட பின்னணி இருக்கிறது என்று தான் அர்த்தம். பற் பல நிபுணர்கள் கூறுவதை விட, ஒரு உதயகுமார் கூறுவது தான் சத்தியம் என சில ஆயிரம் மக்கள் எப்படி_ஏற்கிறார்கள்? அங்கே ஆர்ப்பாட்டம் மும் முரமாகிற போது, மாதா கோயில் மணி ஓயாமல்_ஒலிப்பது ஏன்?

இதில் எதோ ஒரு சதி உள்ளது . இதை முறியடித்து, அணு மின் உற்பத்தியைத் துடங்குவதற்கு  ஆவனசெய்வது, மத்திய-மாநில அரசுகளின் கடமை. இப்போது காவல் துறை அராஜகம் செய்திருப்பதாக கூறியிருப்பது பொய். காவல்துறையுடன் ஆர்ப்பாட்டககாரர்கள் விளையாடுகிறார்கள். காவல்துறையுடன் மோதுகிறார்கள். அவர்களை ஒடுக்கவேண்டும். ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் , அது ஆர்ப்பாட்ட தலைமையின் பொறுப்பேதவிர, அரசின் தவறல்ல.

'பேச்சுவார்த்தை, பேச்சு வார்த்தை' என்கிறார்கள். தமிழக முதல்வர் இவர்களுடைய 'அச்சங்களையும் 'கவலைகளையும் போக்கு வதற்காக, இவர்களிடம் பேச்சு நடத்தியாகிவிட்டது. பலமுயற்சிகளை எடுத்தாகி விட்டது. இனி அவரும் பொறுமைகாட்ட வேண்டிய அவசியமில்லை.

ஆர்ப்பாட்டக் காரர்கள், அணு மின் நிலையத்தையே பாதிக்கிற வகையில் எதுவும் செய்யமாட்டார்கள் என்பதற்கு உத்திரவாதமில்லை. நாட்டு வெடிகுண்டை வீசினால்கூட பேராபத்து விளையலாம். அதைத் தான் ஆர்ப்பாட்டத்தலைமை விரும்புகிறது. அதன்பிறகு பழியை 'விஷமிகள்' மீதோ, 'அணுமின்நிலைய ஆதரவாளர்கள்' மீதோ போட்டு விட்டு, இந்த ஆர்ப்பாட்டத்தலைமை, தங்களுடைய அடுத்த வேட்டைக்கு போய் விடலாம். அம்மாதிரி ஏதாவது நடப்பதற்குமுன், அவர்கள் பலவந்தமாக அப்புறப் படுத்தப்பட்டு, அணு மின் நிலையத்திற்குப் பாதுகாப்பு தரப்பட வேண்டும்.

ஆர்ப்பாட்டக் காரர்கள், சமுத்திரத்தில் இறங்கி விளையாடு கிறார்கள். 'சமுத்திர ஸ்நானம்' புண்ணியத்தைதரும். 'ஸாகரம் ஸர்வ பாப ஹரம்' – ஸமுத்திரம் சகல பாபங்களையும் நாசம்செய்யும் – என கூறப்பட்டிருக்கிறது. அந்த பாபநாசத்தை, அவர்கள் பெற்றுக்கொள்ளட்டும். மற்றவர்கள், மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ளட்டும்.
  இந்தியாவில் உள்ள அணுமின் நிலையங்கள்