சனி, 3 நவம்பர், 2012

செய்யும் பணி முக்கியமல்ல! யாருக்காக அதைச் செய்கிறோம் என்பதே முக்கியம்


விபீஷணன், சுக்ரீவன், அங்கதன், நீலன், நலன் மற்றும் ஏனைய வானரங்கள் எல்லாரும் கூடியிருக்கின்றனர்.

விபீ: நமக்கெல்லாம் மகிழ்ச்சியளிக்கும் செய்தி வந்திருக்கிறது. ஸ்ரீராமனுக்கு விரைவில் பட்டாபிஷேகம் நடக்கப் போகிறது! நாள் கூட
குறித்தாயிற்று. இந்த விழாவை மிகச் சிறப்பாக நாம்தான் நடத்த வேண்டுமென கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவே இது குறித்து நாம் ஆலோசிக்கவே இந்தக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறேன்.

சுக்: ஆஹா! மிக்க மகிழ்ச்சி! எல்லா வேலைகளையும் நமக்குள் பிரித்துக்கொண்டு, அவற்றை ஒழுங்காகச் செய்ய வேண்டும்.

எல்லாரும்: அப்படியே ஆகட்டும். நீங்களே பிரித்துக் கொடுத்து விடுங்கள். அதன்படியே செய்கிறோம், தலைவா!

நலன்: ஒரே ஒரு சின்ன விஷயம்......

சுக்: சொல் நலா! ஏன் தயங்குகிறாய்? தைரியமாகச் சொல். இதில் பங்கு பெறுவது நமக்கெல்லாம் பெருமை மட்டுமல்ல; இது நம் கடமையும் கூட!

நலன்: அதெல்லாம் சரிதான், தலைவா. எனக்கென்ன தோன்றுகிறதென்றால், இதுவரை நடந்த ராம காரியங்கள் எல்லாவற்றிலும் முதலிடம் வகித்தவன் அனுமன் தான். நமக்கெல்லாம் வேலையே இல்லாமல் அவனே அனைத்தையும் செய்து பெயர் வாங்கிக்கொண்டு போய்விட்டான். இப்போது ஊர் உலகமெல்லாம் அனுமனையே கொண்டாடுகின்றன. அதனால்...

விபீ: அதனாலென்ன? நீ என்ன சொல்ல வருகிறாய்?

அங்: நலன் இதைப் பற்றி முன்னமேயே என்னிடம் பேசிவிட்டான். அவன் சொல்லத் தயங்குவதால் நானே சொல்கிறேன்..... இந்த முறை இந்த பட்டாபிஷேக விஷயத்தில் ஒரு வேலையும் விடாமல் அனைத்தையும் நாமே பங்கு போட்டுக் கொள்ள வேண்டும். நல்ல வேளையாக அனுமன் இந்தக் கூட்டத்துக்கு இன்னும் வராமல் இருப்பது நல்லதுக்கே! அவன் வருவதற்குள் எல்லா காரியங்களையும் நமக்குள் பிரித்துக் கொண்டுவிட்டால், அவன் வந்து கேட்டால், அடடா... ஒண்ணுமே இல்லையேப்பா! எனச் சொல்லி சமாளித்து விடலாம். சரிதானே நலா?

நலன்: அதே! அதே!

சுக்: ம்ம்ம்ம். இதுவும் நல்ல யோசனையாகத்தான் படுகிறது. நானும் இது பற்றிக் கேள்விப் பட்டேன். சரி, நான் ஒரு பட்டியல் தயார் செய்து கொண்டு வந்திருக்கிறேன். அதன்படி எல்லா வேலைகளையும் ஒவ்வொருவரும் பார்த்து அதன்படியே சிறப்பாகச் செய்து முடிக்க வேண்டும். இந்தாருங்கள்.

[பட்டியலை நீட்ட, அனைவரும் தங்கள், தங்கள் வேலையைக் குறித்துக் கொள்கிறார்கள்.
அப்போது அனுமன் அவசர அவசரமாக உள்ளே நுழைகிறான்.]

அனு: ஸ்ரீராமனுக்கு ஜெய்! மன்னிக்கவும் தலைவா! ராம பிரான் குளிப்பதற்காகத் தண்ணீர் எடுத்து வைத்து வந்தேன். அதனால், சற்று தாமதமாகி விட்டது. பட்டாபிஷேக வேலை பற்றிய கூட்டம்தானே? எனக்கென்ன பணி கொடுத்திருக்கிறீர்கள்? எதுவானாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு முடிக்கிறேன்.

[ஆவலுடன் பட்டியலை வாங்கிப் பார்க்கிறான். முகத்தில் ஏமாற்றம் தவழ்கிறது!]

அனு: என்ன? எனக்கு ஒரு வேலையும் இல்லையா? என் பெயரே இதில் இல்லையே?

விபீ: அப்படியெல்லாம் ஒன்றுமில்லை ஆஞ்சநேயா! ஒவ்வொரு பணியாகச் சொல்லச் சொல்ல, ஒவ்வொருவரும் ஏற்றுக் கொண்டுவிட்டனர். அதனால் உனக்குகெனக் கொடுக்க ஏதுமில்லாமல் போயிற்று. அதனாலென்ன? நீதான் இத்தனைக் காலமாய் பணி செய்து களைத்துப் போயிருக்கிறாயே! சற்று ஓய்வெடுத்துக் கொள்ளேன். விழாவை நன்றாக ரசித்து, வயிறார உண்டு மகிழ்வுடன் இரு!

அனு: [கலக்கத்துடன்] எனது ராமனுக்கு பட்டாபிஷேகம்! நான் ஓய்வெடுப்பதா? இதென்ன கொடுமை? எப்படி என்னால் இந்த நல்ல காரியத்தில் ஒரு வேலையும் செய்யாமல் இருக்க முடியும்? தலைவா! ஏதாவது ஒரு சின்ன வேலையாவது கொடுத்து அருளுங்க!
சுக்: இல்லையே அனுமந்தா! அப்படி ஏதாவது இருந்தால் கொடுக்க மாட்டேனா? இந்தக் காரியத்தில் உன் பணி என ஏதுமில்லை என்பதே என் முடிவு! அப்படி ஏதேனும் விட்டுப் போயிருப்பதாக நீ நினைத்தால், நீயே சொல்லேன். தருகிறேன்.

[அனுமன் பட்டியலை வாங்கிப் படிக்கிறான். அவன் முகம் மலர்கிறது!
]
அனு: முக்கியமான ஒன்றை மறந்து விட்டீர்களே!

சுக்: [திகைப்புடன், பட்டியலை வாங்கியபடியே] இல்லையே! ஒரு சின்ன வேலைகூட விடாமல் எல்லாவற்றையும் குறித்திருந்தேனே. அப்படி எதை விட்டு  விட்டேன் அனுமா?

அனு: [மலர்ச்சியுடன்} ஸ்ரீராமன் எவ்வளவு பெரிய பதவியில் உட்காரப் போகிறார்? அப்படிப்பட்ட அவருக்கு எத்தனை காரியங்கள் காத்திருக்கும்? அப்போது அவருக்குக் கொட்டாவி வந்தால், அவர் என்ன செய்வார்? சொடக்குப் போடக்கூட நேரமில்லாத அவரால், அதை எப்படி செய்ய முடியும்? எனவே, அவர் எப்போதாவது .... எப்போதாவதுதான், சரியா?...கொட்டாவி விடும்போது, அவர் வாயருகே சொடக்கு போடும் பணியை எனக்குக் கொடுங்களேன், தலைவா!

சுக்: [இதெல்லாம் ஒரு பணியா? சரி, சரி, இருந்தாலும் அதையே தருகிறேன். போய் வா!

அனு: மிக்க வந்தனம் தலைவா! நான் வருகிறேன். இந்நேரம் குளித்திருப்பார். போய் துவட்டிவிட வேண்டும். நான் வருகிறேன். அனைவருக்கும் வணக்கம்.

[அனுமன் வேகமாக ஓடுகிறான்!]

நலன்: நன்றாக ஏமாந்தான் அனுமன்! கொட்டாவிக்கு சொடுக்கு போடுவதெல்லாம் ஒரு பணியா? ராமபிரானுக்கு எப்போது கொட்டாவி வருவது? இவன் எப்போது சொடக்கு போடுவது? முக்கியப் பணிகளெல்லாம் நம்மிடமே! இந்த முறை அவனுக்கு பெயர் கிடைக்கப் போவதில்லை!

அனைவரும்: ஆமாம், ஆமாம்!
[சிரிக்கிறார்கள்.]
------------

காட்சி -2.

[பட்டாபிஷேக நாள். அவரவர் மும்முரமாகப் பணிகளில் ஈடுபட்டு அலைகின்றனர். அனுமன் மட்டும் ஸ்ரீராமன் எங்கே சென்றாலும் நிழலாகத் தொடர்கிறான்.]

ஸ்ரீராமன்: [சற்று கேலியாக] என்ன ஆஞ்சநேயா! உனக்கு ஒரு வேலையும் கிடையாதா? அதோ பார்! விபீஷணன் கிரீடத்தைக் கையில் வைத்துக் கொண்டிருக்கிறான். அங்கதன் என் உடைவாளைக் கவனமாகப் பிடித்துக்கொண்டு நிற்கிறான். சுக்ரீவன் வந்தவர்களையெல்லாம் கவனித்துக் கொண்டிருக்கிறான். நலன், நீலன் இன்னும் மற்ற வானரர்கள் எல்லாம் மாலை, தோரணம், வாத்திய இசை, பந்தி உபசரிப்பு என ஆளாளுக்கு ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நீ மட்டும் என் பின்னாலேயே அலைகிறாயே! என்ன சமாச்சாரம்?

அனு: இல்லையே என் பிரானே! நானும் ஒரு முக்கியமான வேலையைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

ஸ்ரீராமன்: அப்படியா? அதென்ன அத்தனை முக்கியமான வேலை?

அனு: [[பணிவுடன்] உங்களுக்கு கொட்டாவி வரும்போது சொடக்கு போடும் வேலை என்னுடையது எம்பிரானே!

ஸ்ரீராமன்: [சிரிப்பை அடக்க முடியாமல்] என்னது? என்னது? இன்னொரு முறை உரக்கச் சொல்! இங்கிருக்கும் அனைவரும் நன்றாகக் கேட்கட்டும். என்ன பணி உன்னுடையது?
[அனைவரும் ஆவலுடன் கவனிக்கின்றனர்... அனுமனை எட்டிப்போய் நில் எனச் சொல்வாரென எதிர்பார்த்து!]

அனு: [பணிவுடனே] தங்களுக்கு எத்தனை முக்கியமான காரியங்கள் இருக்கும்! அப்போது,... எப்போதாவது உங்களையும் அறியாமல், களைப்பினால் கொட்டாவி விட்டால், நான் உடனே சொடக்குப் போடுவேன். அதற்குத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன்.

ஸ்ரீராமன்: ஓ! அப்படியா சமாச்சாரம்! எனக்கு இன்னும் சரியாகப் புரியவில்லை. சற்று விளக்கமாகச் சொல்லேன். அதற்கு ஏன் இப்படி என் பின்னாலேயே அலைந்து கொண்டிருக்கிறாய்? அப்படி தொலைவில் ஒரு ஓரமாக நிற்கலாமே!

அனு: அதில்லை மஹா ப்ரபோ! நான் ஒரு ஓரமாக நிற்கலாந்தான்! ஆனால் அப்படி நிற்கும்போது சட்டென‌ உங்களுக்குக் கொட்டாவி வந்துவிட்டால் நான் எப்படி சொடக்கு போட முடியும்? அதற்காகத்தான் இப்படி....!

ஸ்ரீராமன்: சபாஷ்! உனக்கு ஒரு வேலையும் கொடுக்காமல் மற்ற‌வர்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு விட்டதால், இப்படி ஒரு சமயோசிதம் செய்தாயோ அனுமந்தா! என் கூடவே இருப்பதற்கு இப்படி ஒரு தந்திரம் செய்தாயே! செய்யும் பணி முக்கியமல்ல! யாருக்காக அதைச் செய்கிறோம் என்பதை உலகுக்கு எடுத்துக்காட்ட இந்த நாடகம் ஆடினாயோ? தீர்க்காயுஷ்மான் பவ‌!

அனு: [மேலும் பணிவுடன்] தாங்களே இப்படி நாடகமெனச் சொல்லலாமா, மஹராஜ்! ராம காரியமென்றால் அதில் பெரிது, சிறிது என்ற பேதம் இருக்கலாமோ! என்ன பணியானாலும் அதைச் சிரத்தையுடன் செய்ய வேண்டாமோ! அனைத்தும் தங்கள் மஹிமையே!

நெடுஞ்சாண்கிடையாக விழுந்து பணிகிறான்.
ஏனைய வானரர்கள் எல்லாரும் அனுமனின் இந்த சாதுர்யத்தைக் கண்டு வெட்கித் தலை குனிகின்றனர்.

ஜெய் விஜயீ பவ!
கோஸலேந்த்ரனுக்கு ஜெய மங்களம்! என்னும் கோஷம் விண்ணைப் பிளக்கிறது!

ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய்ஜெய் ராம்!

அந்நிய தேசத்துக்கு கொள்ளை போகும் செல்வம் வரலாறு திரும்புகிறது


சுதந்திரப்போராட்ட காலம் அது; அக்காலத்தில் நாடெங்கும் மேடைகள் போட்டு ஆங்கிலேய ஆதிக்கத்தை ஒடுக்க வேண்டும். அவர்களை இந்திய நாட்டை விட்டு விரட்ட வேண்டும் எனப்பேச்சாளர்கள் வீர முழக்கமிட்டுப் பேசி வந்த காலம்.

ஒரு மேடையில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளையும்,அவரோடு விடுதலை போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவும் அமர்ந்திருக்கிறார்கள்.அப்போது ஒருபேச்சாளர், "வெள்ளைக்காரர்களை மூட்டை முடிச்சுகளோடு இந்தநாட்டை விட்டே விரட்ட வேண்டும்"வ.உ.சிதம்பரம் பிள்ளை என ஆவேசமாக தனது பேச்சினூடே தெரிவித்தார்.

அவரது பேச்சை இடைமறித்து சுப்பிரமணிய சிவா எழுந்து, "இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்"என்றார்.இதனால்,மேடையில் இருந்தவர்களும்,பேச்சாளரும் கூட்டத்திற்கு வந்திருந்த ஆயிரக்கணக்கானவர்களும் ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தார்கள்.

சுப்பிரமணிய சிவா தொடர்ந்து பேசினார். 'வெள்ளைக்காரர்களை மூட்டைமுடிச்சுக்களோடு இந்த நாட்டைவிட்டு விரட்ட வேண்டும் என்று நண்பர் கூறினார். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் மூட்டை முடிச்சுகள் நம்முடையவை! வெள்ளைக்காரர்களை வெறும் பயல்களாகத் தான் நாட்டை  சுப்பிரமணிய சிவாவிட்டு விரட்ட வேண்டும்' என்று கூறினார்.இதைக் கேட்டுக்கொண்டிருந்த அனைவரும் உற்சாக ஆரவாரம் செய்து "வந்தே மாதரம்" என வீரமுழக்கம் இட்டனர்.

இந்த சம்பவம் நடைபெற்று நூறு ஆண்டுகள் ஆகியும்,வரலாறு திரும்புகிறது இல்லையா? இது தான் ஆச்சரியம் நிறைந்த கொடுமை!

அக்டோபர் 26 -ஜம்மு&காஷ்மீர் தினம்

 அக்டோபர் 26 -ஜம்மு&காஷ்மீர் தினம்
1947 அக்டோபர் 26 அன்று பாரதத்துடன் மற்ற சமஸ்தானங்கள் எப்படி இணைந்ததோ அது போன்றே ஜம்மு&காஷ்மீர் சமஸ்தானமும் பாரதத்துடன் முழுமையாக இணைந்தது.

பல்வேறு காரணங்களால் நமது நாட்டின் சுதந்திர தினமான 1947
ஆகஸ்ட் 15க்கு முன்பாக ஜம்மு&காஷ்மீர் சமஸ்தானம் பாரதத்துடன் இணையவில்லை, அச்சமயத்தில் அது நமது நாட்டுடன் இணையாமல் தனியான சுதந்திர நாடாகத் திகழ்ந்து வந்தது. அந்நாட்டினை டோக்ரா பரம்பரையைச் சார்ந்த ஹிந்து மன்னர் ஹரி சிங் ஆட்சி செய்து வந்தார். ஆனால் அந்நாட்டில் முஸ்லிம்கள் பெரும்பான்மை யினராக வாழ்ந்து வந்தனர். டோக்ரா ஹிந்து மன்னர் பரம்பரையினர் மீது ஜம்மு காஷ்மீர் மக்கள் அனைவரும் பெருமதிப்பு வைத்திருந்தனர். நமது நாட்டில் வேறெங்கும் காண முடியாத காட்சி அது.

இந்தியாவின் கவர்னர் ஜெனரல் ஆக இருந்த லார்ட் மௌன்ட்பேட்டன் அவர்களுக்கு 1947 ஆம் வருடம் அக்டோபர் 26 ஆம் தேதியன்று பாரதத்துடன் எவ்வித நிபந்தையும் இன்றி தனது ஜம்மு காஷ்மீர் சமஸ்தானத்தை மற்ற சமஸ்தானங்கள் எப்படி ஒன்றினைந்ததோ அதேபோன்று தானும் இணைப்பதாக எழுதி கையொப்பமிட்டு அனுப்பிவைத்தார். அக்டோபர் 27, 1947 அன்று அதை ஏற்றுக் கொண்டு அங்கீகரித்து கைச்சாத்து இட்டதுடன் ஜம்மு காஷ்மீர் சமஸ்தானத்தை இந்தியாவின் ஒரு மாநிலமாக அறிவித்தார் கவர்னர் ஜெனரல் ஆக இருந்த லார்ட் மௌன்ட்பேட்டன்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருந்தும் கூட எவரும் ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தானுடன் சேரவேண்டும் என்று குரல் எழுப்பிடவில்லை. மன்னர் ஹரி சிங் ஜம்மு காஷ்மீரை பாரதத்துடன் இணைத்த பிறகும் கூட அம்முடிவை எந்த ஒரு முஸ்லிமும் எதிர்க்க வில்லை. தனி உரிமைகள் சிறப்பு சலுகைகள் வேண்டும் என்று கூட அவர்கள் கேட்டிடவில்லை. அப்படி இருக்க ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் இந்திய அரசியல் சாசனத்தில் பிரிவு 370 எதற்காக உருவாக்கப்பட்டது. தற்காலிகமானது வெறும் 10 வருடங்களுக்கு மட்டுமே இது அமுலில் இருக்கும் பின்னர் அகற்றிக் கொள்ளப்படும் என்று அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 62 வருடங்கள் சென்ற பிறகும் அந்த அரசியல் சாசன சட்டம் 370 வது பிரிவு நீக்கப்படாமல் இருப்பது ஏன்?

1947ஆம் வருடம் மன்னர் ஹரி சிங் இணைத்த முழு ஜம்மு காஷ்மீர் இன்று நம்முடன் உள்ளதா? ஜம்மு காஷ்மீர் துண்டாடப்பட்டதற்கான காரணம் என்ன? பாரத ராணுவம் வெற்றிகரமாக பாகிஸ்தான் கூலிப்படையினரை விரட்டி அடித்துக் கொண்டிருந்த போது திடீர் என போரை நிறுத்திட வேண்டியதன் காரணம் என்ன? இந்திய பாகிஸ்தான் பிரச்சனையை தேவையில்லாமல் ஐக்கிய நாடுகள் சபைக்கு எடுத்துச் சென்றது ஏன்? ஐக்கிய நாடுகள் சபையின் வரலாற்றில் என்றைக்காவது அது நடுநிலையாக நடந்து கொண்டதுண்டா? பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள ஜம்மு காஷ்மீர் பகுதியில் இருந்து முற்றிலுமாக தனது ராணுவத்தை திரும்பப் பெறவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியும் இன்று வரை அதற்கு பாகிஸ்தான் செவி சாய்க்கவில்லை. மன்னர் ஹரி சிங் இணைத்த முழு ஜம்மு காஷ்மீரும் இன்று நம்மிடம் இல்லை.

1947இல் ஜம்மு காஷ்மீர் சமஸ்தானம் நம்முடம் இணையும்போது ஜம்மு, காஷ்மீர், லடாக், கில்கித் மற்றும் பால்டிஸ்தான் என ஐந்து வகைப் பகுதிகளாக இருந்தது. சுதந்திர பாரதத்துடன் இணைந்த சமஸ்தானங்களிலேயே நிலப்பரப்பில் மிகப் பெரியது ஜம்மு காஷ்மீர். இணையும்போது மொத்தம் 2,20,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாக இருந்தது. ஆனால் இப்போது அதை ஒருபக்கம் பாகிஸ்தானும் மற்றொருபக்கம் சீனாவும் ஆக்கிரமித்துள்ளது. மன்னர் ஹரி சிங் இணைத்த ஜம்மு காஷ்மீரில் தற்போது 45% மட்டுமே இன்று நம் வசம் உள்ளது.

ஜம்மு பகுதி 36,315 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. அதில் தற்போது நம் வசம் வெறும் 26,000 ச.கி.மீ.மட்டுமே உள்ளது. இதன் தெற்கே பீர்பாஞ்சால் என்கிற எவராலும் எட்ட முடியாத மிக உயர்ந்த மலைத்தொடர் உள்ளது. அங்குதான் தாவி, சீனாப், ரவி, போன்ற வற்றாத ஜீவா நதிகள் உற்பத்தியாகி ஜம்மு காஷ்மீரை வளப்படுத்துகின்றன. தற்போது நம் வசம் இருக்கின்ற ஜம்மு பகுதியில் 67% சதவிகிதம் பேர் இந்துக்கள். இவர்கள் பேசுகின்ற மொழி டோக்ரா மற்றும் பஹாடி ஆகும்.

காஷ்மீர் பள்ளத்தாக்கு மொத்தம் 22,000 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. அதில் தற்போது நம் வசம் இருப்பது வெறும் 16,000 ச.கி.மீ.மட்டுமே. தற்சமயம் இங்கு முஸ்லிம்கள் மட்டுமே வசித்து வருகின்றனர். இங்கு காலங்காலமாக வசித்து வந்த ஹிந்துக்கள் 4 லக்ஷம் பேர்கள் வெளியேற்றப்பட்டு ஜம்மு உட்பட நாட்டின் பல இடங்களில் வசித்து வருகின்றனர். இங்கு ஜீலம் மற்றும் கிஷன் கங்கா நதிகள் பாய்ந்தோடுவதால் அழகிய இரண்டு பள்ளத்தாக்குப் பகுதிகள் உள்ளன. ஒன்று ஜீலம் பள்ளத்தாக்கு மற்றொன்று லோலாப் பள்ளத்தாக்கு ஆகும். இங்கு மக்கள் பேசுகின்ற மொழி கஷ்மீரி. ஆனால் மூன்றில் ஒரு பகுதி காஷ்மீர் பள்ளத்தாக்கில் பஞ்சாபி-பஹாடி மொழி பேசுகின்றனர்.

லடாக்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலேயே மிகப் பெரிய பகுதியாகும். மொத்தம் 1,64,748 ச.கி.மீ.பரப்பளவு கொண்டது. அதில் மிகக் குறைந்த பரப்பளவே அதாவது வெறும் 59,000 ச.கி.மீ. பரப்பளவு மட்டுமே இன்று நம்வசம் உள்ளது.

இயற்கை தனது அத்தனை வளங்களையும் இங்கு கொட்டிவிட்டதோ என்று சொல்லக்கூடிய அளவிற்கு மிக அழகிய அற்புதமான பகுதி. எண்ணற்ற புத்த மடாலயங்கள், விஹார்கள் உள்ளன. அமைதி தவழும் பகுதியாகும். கார்கில் போன்ற மிக உயரமான மலைத் தொடர்கள் உள்ள பகுதி லடாக். ஆறுகள் எப்போதும் பனி உறைந்தே காணப்படும். வருடத்தில் மிக மிகக் குறைவாக மழை பொழிகின்ற இடம் இதுதான். காரகோரம் நெடுஞ்சாலை இங்குதான் செல்கிறது. லே, மற்றும் கார்கில் என இரண்டு மாவட்டங்கள் உள்ளன. ஒரு நாடாளுமன்றம் 4 சட்டமன்றத் தொகுதிகளும் இங்கு இடம் பெற்றுள்ளன.

கார்கில் பகுதியில் வாழ்ந்து வருகின்ற "ஷியா" பிரிவு முஸ்லிம்கள் தீவிரமான தேச பக்தர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. லடாக்கின் பெரும் பகுதியை சீனா கைப்பற்றி வைத்துக் கொண்டுள்ளது. லடாக்கினை தெற்கு திபெத் என்று சீனா அழைக்கிறது. லே, சன்ஸ்கார், சங்தங், நுப்ரா, பள்ளத்தாக்குகளில் முழுக்க முழுக்க பௌத்தர்கள் வாழ்கின்றனர். சுரு பள்ளத்தாக்கில் முஸ்லிம்கள் மட்டுமே அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். இங்கு மக்கள் லடாக்கி, பால்ட்டி அல்லது பாலி மொழிகளில் பேசுகின்றனர்.

கில்கித் மற்றும் பால்டிஸ்தான் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கில்கித் மற்றும் பால்டிஸ்தான் பகுதி முழுவதும் இன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ளது. 1947 ஆம் வருடம் பாகிஸ்தான் ஆக்கிரமித்ததை நாம் இன்று வரை மீட்காமல் இருந்து வருகிறோம். அப்பகுதியை விடுதலை செய்யப்பட்ட அதாவது "ஆசாத் காஷ்மீர்" என்று பாகிஸ்தான் அழைக்கிறது. நாம் அதை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று அழைக்கிறோம். ஆக்கிரமித்த அப்பகுதிகளை பாகிஸ்தான் தனது முழுமை யான அரசு நிர்வாகத்தின் கீழ் எடுத்துக் கொண்டு, அதை நேரிடையாக நிர்வாகம் செய்து வருகிறது.

கில்கித் மற்றும் பால்டிஸ்தான் பகுதி மொத்தம் 63,000 ச.கி.மீ.பரப்பளவு கொண்ட தாகும். அதில் கில்கித் மட்டும் 42,000ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. பால்டிஸ்தான் 20,000 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. கில்கித் ராணுவம் மற்றும் தேசப் பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் மிகமிக முக்கியமான பகுதியாகும். அங்கு சர்வதேச எல்லைக்கோடு உள்ளது. 6 நாடுகளின் எல்லைகள் சந்திக்கின்ற மிக முக்கியமான இடமாகும். ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான், சீனா, திபெத் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளின் எல்லைகள் அங்கு சங்கமமாகின்றது. இப்பகுதி யார் வசம் இருக்கிறதோ அவர்கள் ஆசியப் பிராந்தியத்தில் இராணுவரீதியில் மற்றும் பல வகைகளில் ஆதிக்கம் செய்யமுடியும்.

இப்பகுதியின் முக்கியத்துவத்தை அறிந்த அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா கூட இப்பகுதியில் தங்களது ஆதிக்கத்தை நிலை நிறுத்திட முயன்றன. கில்கித்தை தனக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொள்வதற்காக சோவியத் ரஷ்யா அவ்வப்போது பாகிஸ்தானுக்கு உதவி செய்து வந்துள்ளது. தற்போது அங்கு11,000 சீனத் துருப்புகள் இருந்து வருகின்றனர். சீனா ஒரு லக்ஷம் கோடிக்குமேல் அங்கு முதலீடு செய்துள்ளது. மேலும் சீனக் கம்பெனிகளில் வேலை செய்வதற்காக பல ஆயிரம் சீனர்கள் அங்கு வந்துள்ளனர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரில், பஞ்சாபி மட்டும் பஹாடி மொழி பேசுகின்றவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் ஆவர். ஆனால் சுமார் 10 ௦ லக்ஷத்திற்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து இடம் பெயர்ந்து வந்த ஹிந்துக்கள் 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஜம்முவிலும் நாட்டின் பிற பகுதிகளிலும் அகதிகளாக வசித்து வருகின்றனர்.

1962 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 20 ஆம் தேதியன்று சீனா நமது நாட்டின் மீது தாக்குதல் தொடுத்தது. அப்போரில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் லடாக் பகுதியில் 36,500 ச.கி.மீ. பரப்பளவு இடத்தை சீனா ஆக்கிரமிப்பு செய்து வைத்துக் கொண்டுள்ளது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் வேறு தான் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளவற்றிலிருந்து சுமார் 5,500 ச.கி.மீ.பரப்பளவு இடத்தை சீனாவிற்கு தாரை வார்த்துள்ளது. அதில் இப்போது பாகிஸ்தானையும் சீனாவையும் இணைக்கும் சாலை போடப்பட்டுள்ளது. அங்குதான் காரகோரம் நெடுஞ்சாலை செல்கிறது.

நமது நாட்டின் இழந்த பகுதிகள் அனைத்தையும் மீட்டிட வேண்டும் என 1994 ஆம் வருடம் நமது நாட்டின் நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் அதற்குத் தேவையான நடவடிக்கைகள் எதையும் நமது மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. அம்மாதிரி ஒரு தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதே நாட்டு மக்கள் பலருக்குத் தெரியாது.

மன்னர் ஹரி சிங் 1947 ஆம் வருடம் பாரதத்துடன் இணைத்த முழு ஜம்மு காஷ்மீரை என்று காண்போம். நமது நாட்டின் இழந்த பகுதிகள் அனைத்தையும் மீட்டிடுவோம். இருக்கின்ற ஜம்மு காஷ்மீரைக் காத்திடுவோம்.