வெள்ளி, 27 டிசம்பர், 2013

துன்பங்களை, கஷ்டங்களை பொருத்துக் கொண்டால் மகிழ்ச்சி கிடைக்கும்

 ஒரு ஊரில் ஒருசிற்பி இருந்தான். ஒருநாள் அவனிடம் அந்த ஊர்மக்கள், ' ஒரு கோயில் கட்டுகிறோம். சாமிசிலை ஒன்றை செதுக்கி தாருங்கள்' என்றுகேட்டனர். சிற்பி சரி என்று அருகில் இருந்த மலையில் இரண்டுகற்களை கொண்டு வந்தான். ஒருகல்லை சாமி சிலையாகவும், இன்னொரு கல்லை வாசலில் படிகல்லாகவும் செய்து முடித்தான். கோயில்கட்டி முடிவடைந்தது.

ஒரு நள்ளிரவில் யாரோ அழுவதுகேட்ட சாமிக்கல், ' யாரது அழுவது' என கேட்டது. உடனே வாசலில் இருந்த படிக்கல், ' நான்தான் அழுகிறேன்' என்றது. சாமிக்கல் அதற்கான காரணத்தைகேக்க, அதற்கு படிக்கல் கூறியது, ' நாம் இருவரும் ஒரேமலையில் தான் பிறந்தோம்..ஒரேசிற்பி தான் நம் இருவரையும் செத்துக்கினான். ஆனால், உன்னை மட்டும் சாமி சிலையாகிசெய்து கற்ப கிரகத்தில் வைத்துள்ளான். என்னை படிக்கல்லாக வெளியே வைத்து விட்டான். உன்னை அனைவரும் கைஎடுத்து வணங்குகின்றனர். ஆனால், என்னை ஏறிமிதிக்கின்றனர். இது என்ன அநியாயம்..?' என புலம்பியது படிக்கல்.

அதற்கு உள்ளே இருந்தசாமிக்கல் ' உன் நிலைக்கு நீயேதான் காரணம். உன்னை சிற்பி செதுக்க உளியை உன்மீது அடித்தார். நீ வலியை தாங்கமுடியாமல் கதறினாய். உன்மீது எங்கு உளிபட்டாலும் உன்னால் அந்தவலியை தாங்க முடியவில்லை. நீ சிற்பிக்கு ஒத்துழைக்கவில்லை. ஆகையால் சலிப்படைந்த சிற்பி, உன்னை படிக்கல்லாக வெளியேவைத்தான். என் மீது உளியை வைத்து அடிக்கும்போது அந்த வலியை நான் பொருத்து கொண்டேன்..தலை, கை, கால் என எல்லாபகுதியை அவன் செதுக்கும் போதும் நான் வலியை பொருத்துக் கொண்டேன். ஆகையால் நான் ஒருசிலையாக உருப்பெற்றேன். நான் வலியை தாங்கியதால் என்னை அனைவரும் வணங்குகின்றனர். நீ வலியை தாங்காததால், உன்னை மிதிக்கின்றனர்' என கூறிய உடன்தான் படிக்கல்லிற்கு தன் தவறு புரிந்தது.

உண்மை தானே...நம்வாழ்வில் ஏற்படும் துன்பங்களையும் கஷ்டங்களையும் யார் பொருத்துக் கொள்கிறார்களோ, அவர்களே எதிர் காலத்தில் நிம்மதியான, மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவிக்கமுடியும்..

சேவை இல்லாத வெறும் பக்தி உபயோகமில்லாதது

 சேவை இல்லாத வெறும் பக்தி உபயோகமில்லாததுவிபீஷணனை அனுமன் சந்திக்கிறான். அவனது இல்லத்தில் மஹா விஷ்ணுவின் பிரதிமையை வைத்து அனுதினமும் தவறாமல் பூஜை செய்துவருவதைக் காண்கிறான். 'ஆஹா! இவனல்லவோ சிறந்த விஷ்ணு பக்தன்!' எனப் புளகாங்கிதம் அடைகிறான். அவனுடன் நட்பு கொண்டு, அவனது பக்தியை மெச்சுகிறான்.

ஆனால் விபீஷணன் முகத்திலோ வருத்தமே நிறைந்திருப்பதைக் கண்டு என்ன விஷயம் என அனுமன் வினவுகிறான். அதற்கு விபீஷணன், 'நான் என்ன பக்தி செய்து என்ன பிரயோஜனம்? உன்னைப் போல் ராமனுடன் கூடவே இருக்கவும், அவருடன் அளவளாவவும், அவரை ஸ்பரிஸிக்கவும் பாக்யம் இல்லாமல் போனதே! நான் என்ன பெரிய பக்தன்? இதன் காரணம் என்னவென எனக்குச் சொல்வாயா? என பதிலுக்கு வினவுகிறான்.

சிரித்தபடியே, சற்றுக் கோபத்துடனும், அனுமன் பதில் உரைக்கிறான்...

'பெரிய பக்தன் எனச் சொல்லிக் கொள்கிறாய் நீ! விடாமல் அவர் நாமாவைச் சொல்லிக் கொண்டும்தான் இருக்கிறாய்!ஆனால், சற்று உன் நெஞ்சைத் தொட்டு நீயே சொல்! அன்னை ஸீதா எத்தனை நாட்களாக இங்கு இருக்கிறார்? தன் பதியைப் பிரிந்து எவ்வளவு வாடிக் கொண்டிருக்கிறார்? அவரை ஒரு முறையாவது நீ சென்று பார்த்து, அவருக்கு ஆறுதல் கூறினாயா? அவரை விடுவிக்க உன்னால் ஆன எந்தச் செயலாவது செய்திருக்கிறாயா? தர்மம் அல்ல ராவணன் செய்தது எனத் தெரிந்தும், பகவானைப் பழிக்கும் இடத்தில் ஒரு வினாடி நேரமாவது நீ தங்கியிருந்திருக்கலாமோ? ஸ்ரீராமன் பெயரைச் சொல்வதுடன் உன் பக்தி நின்று விட்டதே! அவரது சேவையில் உன்னை ஈடுபடுத்திக் கொள்ளவே இல்லையே! எப்படி உனக்கு இறை தரிசனம் கிட்டுமென நீ நினைக்கலாயிற்று? சேவை இல்லாத வெறும் பக்தி உபயோகமில்லாதது என நீ உணரவில்லையே! இதுதான் காரணமென நான் நினைக்கிறேன்' எனப் பணிவுடன் சொல்லிக் கிளம்பினான்.